சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஊதியம், ஓய்வூதிய உயர்வு - மு.வீரபாண்டியன் வரவேற்பு
பல துறைகளின் பணியாளர்களும் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளையும் விரைந்து தீர்வு காண வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசிய போது, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள் அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.1200 முதல் ரூ.1400 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 17 நாட்களாக தொடந்து போராடி வருகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் மேலும் மாதம் ரூ.2500 உயர்த்தியும், மே மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடக்கும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சரின் அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் - பணியாளர்களின் நலனை பிரதிபலிக்கும் விதமாக வெளியிட்ட முதல்-அமைச்சரின் அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன் ஊரக உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர் போன்ற பல துறைகளின் பணியாளர்களும் வலியுறுத்தி வரும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.