சென்னையில் தேசிய வாக்காளர் தின விழா - தலைமை தேர்தல் ஆணையர் பங்கேற்பு

மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2026-01-25 15:58 IST

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில், தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், தேசிய வாக்காளர் தின விழா இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், முதல்முறை மற்றும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகளையும் தலைமை தேர்தல் அலுவலர் வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் நாளன்று நிறுவப்பட்டது ஜனவரி 25 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டு அதன் வைர விழாவினைத் தொடர்ந்து 25.01.2011 முதல் தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 16-வது தேசிய வாக்காளர் தினம் மாநில அளவில் இன்று (25.01.2026) நடைபெறுகிறது.

மேலும் தேர்தல் பங்கேற்பை ஊக்குவித்தல், புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் சேர்க்கை மற்றும் பங்கேற்பை ஊக்குவித்தல், தேர்தல் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல். ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் அரசியலமைப்பு மதிப்புகளை முன்னிலைப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், தேசிய வாக்காளர் தின விழா பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் இன்று (25.01.2026) நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் தேசிய வாக்காளர் தின உரை காணொலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்வில் தலைமை தேர்தல் அலுவலர், “தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு குடவோலை முறை இருந்துள்ளது. அத்தகைய சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்ட நாம் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு முக்கியமானது. இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் முழக்கமாக "எனது இந்தியா எனது வாக்கு" என்றுள்ளதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி சிறந்த ஜனநாயகத்திற்கான நமது பங்களிப்பினை செலுத்திட வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலையிலான அலுவலர்களும் தூய்மையான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் சுமுகமாக தேர்தலை நடத்துதல் ஆகிய இரண்டு பணிகள் மேற்கொள்கின்றனர். தற்போது, தீவிர சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அனைத்து மாவட்டங்களிலும், வாக்குச்சாவடிகளிலும், தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்து, வாக்களிப்பது அவசியமாகும் இது ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் அடையாள அட்டை என்பது நமது மதிப்பையும் ஜனநாயக மாண்பையும் உள்ளடக்கியதாகும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான படிவங்களை நேரிலும், இணையதளத்தின் வாயிலாகவும், தேர்தல் ஆணையத்தின் செயலி வழியாகவும் சேர்த்திடலாம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறிக்கோள் வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், முதல்முறை மற்றும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

பின்னர் மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமிதா சதாசிவம், திருநங்கை சமூக ஆர்வலர் சாஷா ஆகியோர்க்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்களிப்பு அவசியம் குறித்து இருவரும் எடுத்துரைத்தனர்.

பின்னர், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்விற்கான நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்