விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இறுதி விளையாட்டுப் போட்டிகள் இன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.;

Update:2026-01-07 21:22 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இன்று (07.01.2026) நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2025-26ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2025-26ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று (07.01.2026) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதை, விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர் ஏற்றுதல், விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றல், மாணவ, மாணவியரின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

சென்னை தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 1500 மீ., 800 மீ., 600 மீ., 200 மீ., 100 மீ., ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4x 100 மீ. தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பள்ளிகள் அளவிலும், மண்டல அளவிலும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இறுதி விளையாட்டுப் போட்டிகள் இன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 318 மாணவர்களுக்கும், மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 48 மாணவர்களுக்கும் கேடயங்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக 10 கிராம் வெள்ளிப் பதக்கம், இரண்டாம் பரிசாக 8 கிராம் வெள்ளிப் பதக்கம், மூன்றாம் பரிசாக 7 கிராம் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த. விஸ்வநாதன், மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, கல்வி அலுவலர் வசந்தி, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஶ்ரீதர், வெ.பரிமளம், உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்