ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் புதிய உற்பத்தி திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ரூ.1100 கோடி முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.;

Update:2025-09-11 15:05 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆம்பர் குழுமத்தின் துணை நிறுவனமான அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஓசூர் எல்காட் தொழில் நுட்பப் பூங்காவில், ஒரு புதிய Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டம் மேற்கொள்ள உள்ளது. தொலைத் தொடர்பு, மோட்டார் வாகன உற்பத்தி, வான்வெளி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளில் உள்ள அடுத்த தலைமுறை பயன்பாடுகளுக்காக இந்த உற்பத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாக உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்த உற்பத்தித் திட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1100 கோடி முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கவுள்ள Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் டி. மதியழகன், ஒய். பிரகாஷ், டி. ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய். வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.பி. கார்த்திகேயன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி. தினேஷ் குமார், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி. மஞ்சுநாத், தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் குண்டாபி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்