ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறையில் வரும் புதிய நடைமுறை

வால்பாறையில் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-19 21:12 IST

நீலகிரி,

ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஐஐடி மற்றும் ஐஐஎம் குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் ஐஐடி, ஐஐஎம் ஆய்வு குழுவினருக்கு தேவையான தகவல்கள், ஆலோசனைகளை வழங்க தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது ஊட்டி, கொடைக்காலனில் இ பாஸ் நடைமுறையில் உள்ளதால் வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர் என்று நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீலகிரி கொடைக்கானலை விட டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுசூழல் ரீதியாக முக்கியமானவை.

எனவே வால்பாறை செல்லும் அனைத்து பகுதிகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் கட்டாயம் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்