புதிய நீர்த்தேக்கத் திட்டம்: அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ? - டிடிவி தினகரன்

செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-19 09:28 IST

சென்னை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர்.

எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்