பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல் வார விடுமுறை என்று தொடர்ந்து 5 தினங்கள் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள், பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி திரும்பியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்தபடி செல்கின்றன.
அதேபோல தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து காரணமாக வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.