அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற 4 புதிய சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தமிழகம் முழுவதும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற 4 புதிய சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம்நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவரும் தூத்துக்குடி துறைமுக சபை உறுப்பினருமான துறைமுகம் சத்யா, தூத்துக்குடி போர்ட் யுனைடெட் ஜென்ரல் ஒர்க்கஸ் யூனியன் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்கள் ஐக்கிய சங்கம் வட்டத் தலைவர் வினோத், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் கிளை பொறுப்பாளர் காந்திசேகர், நெல்லை மாவட்ட தலைவர் ஷாஜகான், தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ராதா, வட்டச் செயலாளர் சேர்மராஜ், வட்டத் தலைவர் அழகுவிஜி, சட்ட ஆலோசகர் மாவட்ட இணை செயலாளர் மணிகண்டராஜா, ஜாகிர்உசேன், தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், ராஜேஷ், இசக்கிமுத்து, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.