விஜய்யின் “ஜனநாயகன்” படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு: நாளை தீர்ப்பு வெளியாகுமா..?

ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதை அதன் பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.;

Update:2026-01-08 07:00 IST

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர இருந்தது. இதனிடையே, ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9 ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய காட்சி

முன்னதாக இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, படத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் சார்பில் சமர்பிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஜனநாயகன் படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது” என்றார்.

அதற்கு நீதிபதி, “இந்த படத்தை முதலில் பார்த்த குழுவில் இடம்பெற்ற ஒரு உறுப்பினர், தன் கருத்தை பரிசீலிக்கவில்லை. சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளது என்று இதுபோல எப்படி புகார் கொடுக்க முடியும்? இந்த புகார் ஏற்புடையதுதானா? அனைத்தையும் பார்க்கும்போது வினோதமாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பரிந்துரையில் திருப்தி இல்லை என்றால், அந்த திரைப்படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரிய தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஜனநாயகன் படத்தில் பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டியதுள்ளது. அவர்களது கருத்தை பெற வேண்டியதுள்ளது. ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதற்கு முன்போ, மறுஆய்வு செய்வதற்கு பரிந்துரைக்கும்போதோ, மனுதாரர் இந்த ஐகோர்ட்டை அணுகமுடியாது.

இந்த நடவடிக்கை அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த விவரம் மனுதாரருக்கு முறைப்படி தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை. தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்யவில்லை. தணிக்கை வாரியம்தான் முடிவு செய்துள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் உள்ளது'' என்று வாதிட்டார்.

உள்நோக்கம் உள்ளது

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், “படத்தை முதலில் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தபின்னர், அதில் ஒரு உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது.

படத்தை பார்த்த உறுப்பினர்கள் தங்கள் பரிந்துரையை வழங்க முடியுமே தவிர, புகார் அளிக்க முடியாது. தணிக்கை வாரியம் முதலில் எடுத்த முடிவை மறுஆய்வு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, படத்துக்கு எதிராக புகார் அளித்தது தணிக்கை வாரிய உறுப்பினர்களில் ஒருவர் என்பதே எங்களுக்கு இப்போதுதான் தெரியும். எனவே, மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும்” என்று வாதிட்டார்.

தணிக்கை வாரியத்தை நிர்பந்தம் செய்யுங்கள் - நீதிபதி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், “ஜனநாயகன் படத்தை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால், இந்த தீர்ப்பை உடனே வழங்கவேண்டும். அல்லது நாளையாவது (அதாவது இன்றாவது) வழங்கினால் நன்றாக இருக்கும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, “இந்த ஐகோர்ட்டை இதுபோல நிர்பந்தம் செய்வதற்கு பதில் தணிக்கை வாரியத்தை நிர்பந்தம் செய்யுங்கள்'' என்று பதில் அளித்தார். பின்னர், நாளை தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக நீதிபதி கூறினார்.

ரிலீஸ் ஒத்திவைப்பு

இதனிடையே நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்காத நிலையில், ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. மேலும் விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்