குடியரசு தினம்: ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.;

Update:2026-01-26 15:39 IST

சென்னை,

குடியரசு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடியினை இன்று ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (26.01.2026) குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேயர் தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முறையாக சொத்துவரியினை உரிய காலங்களில் தாமதமில்லாமல் செலுத்தியவர்கள் மற்றும் அதிக சொத்துவரி செலுத்தியவர்களை கௌரவிக்கும் வகையில் சொத்து உரிமையாளர்களுக்கு பாராட்டுக் கடிதங்களை (Letter of Appreciation) மேயர் வழங்கினார்.

மேலும், 2024-25 ஆம் ஆண்டு குடும்ப நலத் திட்டப்பணிகளில் மாவட்ட அளவில் சிறந்த சேவை வழங்கிய மருத்துவம் சார்ந்த அலுவலர்களைப் பாராட்டி விருதுகளையும், கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள திருமண மண்டபத்தின் சிறந்த கட்டிடக் கலைக்காக நிர்வாக இயக்குநர் அமுதா கிருஷ்ணமூரத்தியை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 172 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும், அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சென்னை மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் மேயர் வழங்கினார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்