நீதிபதி மீது காலணி வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்
சுதாரித்துக்கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.;
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத் (42) , பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது கிண்டி போலீசார் பிணையில் வரமுடியாதபடி 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே, தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அடிதடியில் ஈடுப்பட்ட கருக்கா வினோத், அந்த கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், கவர்னர் மாளிகை வழக்கில் தமக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டுவாறு தனது காலணியை கழட்டி நீதிபதியை நோக்கி வீச முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து நீதிபதி, இது போன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொளி மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார். நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.