ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் வதந்தி - தமிழக அரசு விளக்கம்

காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-11-19 17:03 IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (21 வயது). இவர் ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை கடந்த சில நாட்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து முனிராஜை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவியை வாலிபர் வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

Advertising
Advertising

இதனை சற்றும் எதிர்பாராத மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் 12-ம் வகுப்பு மாணவியைக் கொன்றது பட்டியலின இளைஞர் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும், கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்