சிப்காட்-மாபெரும் தூய்மைப் பணி 2026: தொழிற்பூங்காக்களில் 1,500 டன் கழிவுகள் அகற்றம்
ஒவ்வொரு நாளும் 680 தொழிலாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.;
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, 1,500 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சிப்காட் தொழிற்பூங்காக்கள் முழுவதும் தூய்மையான மற்றும் நிலைத்தன்மை சூழலைப் பராமரிப்பதற்காக ‘மாபெரும் தூய்மைப் பணி 2026’ ஜனவரி 9, 2026 அன்று தொடங்கி ஜனவரி 14, 2026 வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாபெரும் தூய்மைப் பணியானது, தொழிற்பூங்காவிற்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பயன்படுத்தப்படாமல் கிடந்த கழிவுப் பொருட்கள், மழைநீர் வடிகால் கால்வாய்களில் சுத்தம் செய்தல், மேலும் தொழிற்பூங்காக்களுக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் சுத்தம் செய்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நிர்வாக அலுவலக வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பயன்பாட்டுப் பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. இந்த மாபெரும் தூய்மைப் பணிகளின் செயலாக்கத்தைக் கண்காணிக்க, சிப்காட் தலைமை அலுவலகத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பிரத்யேகமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், ஜனவரி 9 முதல் ஜனவரி 14, 2026 வரையிலான ஆறு நாட்களில், மாநிலம் முழுவதும் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களிலிருந்து மொத்தம் 1,500 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. சராசரியாக, ஒவ்வொரு நாளும் 680 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், மேலும் இந்த ஆறு நாட்களில் ஒட்டுமொத்தமாக 4,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த மாபெரும் தூய்மைப் பணியில் அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊழியர்கள் மற்றும் சிப்காட் அலுவலர்கள் இணைந்து பங்கேற்றனர்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.