ஆசிரியர் கண்ணன் மறைவுக்கு யார் பொறுப்பு? முதல்-அமைச்சருக்கு தவெக கண்டனம்

நிறைவேற்றாத வாக்குறுதிகள் உங்கள் ஆட்சியின் வேரை அழித்துக் கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்;

Update:2026-01-14 19:52 IST

சென்னை,

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 

ஆசிரியர் கண்ணன் மறைவுக்கு யார் பொறுப்பு மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்களே?

கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்று நியாயமான முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய அத்துமீறலையும் அராஜகத்தையும் கண்டு ஆசிரியர் கண்ணன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க தாமதம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், ஆசிரியரின் மரணச் செய்தி மிகுந்த வேதனை தருகிறது. ஆசிரியர் கண்ணன் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் இந்த வேதனையை தாங்கிக்கொள்ளும் சக்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.ஆட்சிக்கு வரும் அவசரத்தில், தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181-ல் என்ன சொன்னீர்கள்?

"பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று சத்தியம் செய்தீர்களே!நம்பி வாக்களித்தார்கள்... நான்கு ஆண்டுகள் பொறுத்திருந்தார்கள்... இறுதியில் ரோட்டில் இறங்கிப் போராடினார்கள்.

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? பணி நிரந்தர ஆணையைத் தருவதற்குப் பதிலாக, அவர்களைக் குற்றவாளிகளைப் போல மண்டபத்தில் அடைத்து வைத்தீர்கள்!வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், நம்பி வந்த ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டதுதான் உங்கள் சமூக நீதியா?

நினைவில் கொள்ளுங்கள்...நீங்கள் விதைத்த "நிறைவேற்றாத வாக்குறுதிகள்" ஒவ்வொன்றும், உங்கள் ஆட்சியின் வேரை அழித்துக் கொண்டிருக்கின்றன.

இன்று முதல்... '181' என்பது வெறும் வாக்குறுதி எண் மட்டுமல்ல...உங்களை ஆட்சியை விட்டு அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டிருக்கும் "கணக்கில்" சேர்ந்திருக்கும் மிக முக்கியமான எண். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்