நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
பொருநை அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.;
நெல்லை,
தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தலங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அறிந்துகொள்ளும் வகையில் நெல்லை பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 20-ந்தேதி திறந்து வைத்தார்.
தமிழர்களின் வீரத்தையும், அறிவையும், எதிர்கால தலைமுறையினர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்கள், தமிழர்கள் பயன்படுத்திய பானைகள், ஓடுகள், உள்ளிட்டவற்றை பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அருங்காட்சியகத்தை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆங்கிலபுத்தாண்டு நாளான இன்று (வியாழக்கிழமை) வழக்கம்போல் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட வருகைதருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பொருநை அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர கார்களிலும் பலர் குடும்பத்துடன் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதுமே தற்போது சுற்றுலா தலம் போன்று மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,700 பேர் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
பொருநை அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும். இது தவிர குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய விடுமுறை நாட்கள் மட்டுமே விடுமுறையாகும். மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தினந்தோறும் பார்வையிட அனுமதிக்கப்படுவர். நுழைவுச்சீட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.