‘சங்கி குழுவுடன் தமிழகமே இணையப் போகிறது’ - தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் மோடி தமிழ் கலைஞர்களை சந்தித்து மரியாதை செய்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் ‘பராசக்தி’ படக்குழுவினர் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை சந்தித்தது பேசினர். இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “சங்கி குழுவுடன் பராசக்தி குழு... ஆனால் ஜனநாயகன் முடக்கப்பட்டது” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மாணிக்கம் தாகூரின் விமர்சனம் குறித்து பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“சங்கி குழுவுடன் தமிழகமே இணையப் போகிறது. மாணிக்கம் தாகூர் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க வேண்டியதுதான். 2026-ல் ‘சங்கே முழங்கு’ என்று சங்கிகள் முழங்கப் போகிறோம். பராசக்தி குழுவினர் பிரதமரை சந்தித்தை, தமிழுக்கு தலைநகரில் மரியாதை கொடுக்கப்பட்டதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
காங்கிரஸ் கட்சி நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது. ஆனால் பிரதமர் மோடி தமிழ் கலைஞர்களை சந்தித்து மரியாதை செய்துள்ளார். பராசக்தி படம் தற்போது ரிலீசாகி இருப்பதால் அந்த படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை விஜய் படம் ரிலீசாகி இருந்தால் விஜய்யை கூட அழைத்திருக்கலாம்.
மேலும் தமிழுக்காக போராடியவர்களை காங்கிரஸ் எவ்வாறு சுட்டுக்கொன்றது என்பதை பராசக்தி திரைப்படம் பதிவு செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அதோடு, தணிக்கை வாரியம் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக பராசக்தி தயாரிப்பாளர் கூறியுள்ளார். எனவே ஒரு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு, மற்றொரு படத்தை தணிக்கை வாரியம் தடுத்து நிறுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.