அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது - எடப்பாடி பழனிசாமி சவால்
கிராமத்திலும், நகரத்திலும் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் அதிமுக ஆட்சிக் காலம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
சேலம்,
சேலம் புறநகர் மாவட்ட மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி–மேச்சேரி சாலை, காரப்பட்டி பள்ளம் பகுதியில் 108 பானையில் பொங்கல் வைத்து அதிமுக சார்பில் இன்று காலை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பொங்கல் கொண்டாட்டத்துக்கு இரட்டை மாட்டு வண்டியில் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியை ஓட்டி மக்களை உற்சாகப்படுத்தினார்.
பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்த எடப்பாடி பழனிசாமி, தமிழர் பாரம்பரிய முறையில் தோளில் இருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பொங்கல் வைத்தார். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். மயிலாட்டம், ஒயிலாட்டம், வள்ளிகும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள். இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் வள்ளிகும்மியாட்டம் எழுச்சியாக இருந்தது. கிராமப்புறத்துக்கு ஏற்றவாறு அந்த நடனத்தை ஆடியவர்களுக்கு என் வாழ்த்துகள். கிராமியக் கலைஞர்கள் அனைவருக்கும் என் தைத் திருநாள் வாழ்த்துகள். இந்நிகழ்ச்சியில் குதிரை பிரம்மாண்டமாக ஆடியது; மனிதனால்கூட அப்படி ஆட முடியாது. அந்த குதிரைக்கும் அதன் பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள்.
சேலம் பகுதியில் இவ்வளவு சிறப்பான ஜல்லிக்கட்டு காளைகளை நானே எதிர்பார்க்கவில்லை. நான் வருவதற்காக மாட்டு வண்டியை வழங்கிய விவசாய மக்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கேற்ப, இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நம் அத்தனை பேருக்கும் வழி பிறக்கும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற வகையில் உழவுத் தொழிலை மேம்படுத்தி நமக்காக உழைக்கும் எருதுகளுக்கும் நாம் மாட்டுப் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே பொங்கல் திருநாளை எழுச்சியாகக் கொண்டாடி வருகிறது.
இந்த நாட்டை ஆளக்கூடிய இளைஞர்களும், மாணவர்களும் தைப் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் நம்முடைய பாரம்பரிய அடையாளம்.
அதிமுகவைப் பொறுத்தவரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, அவர் மறைவுக்குப் பிறகு அம்மா காலத்திலும் சரி, அம்மா மறைவுக்குப் பிறகு அம்மாவின் அரசும் சரி, விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம்.
கிராமத்திலும், நகரத்திலும் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் அதிமுக ஆட்சிக் காலம். இன்று திமுக ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகள் சேர இருக்கின்றன. நம் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி. நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
அதிமுக உழைப்பாளர் நிறைந்த கட்சி. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்கும் தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. உலகமே பாராட்டக்கூடிய அளவில் சிறந்த பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார். நாடு செழிப்பாக இருக்கவும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் கிடைப்பதற்கும் மத்தியிலுள்ள ஆட்சி துணை நிற்கிறது.
எனவே, அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தல் எனும் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக் கொடியை நாட்டுவோம்.
எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அளவுக்கு அடக்குமுறை நிலவுகிறது. திறமையற்ற அரசாங்கமும், முதல்-அமைச்சரும் ஆண்டுகொண்டு இருப்பதால் மக்கள் படும் துன்பம் ஏராளம். எந்த மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.
இன்றைக்கு தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவிட்டது. அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என்று போராட்டம் இல்லாத நாளே கிடையாது. அப்படி ஒட்டுமொத்த மக்களும் அரசை புறக்கணிக்கும் நிலை வந்துவிட்டது. மக்கள் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த தைத் திருநாள் ஒரு சிறந்த தைத் திருநாள். அடுத்த தைத் திருநாளை ஆளும் கட்சியாக இருந்து கொண்டாடுவோம். அதிமுக ஆட்சியில்தான் நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வறண்ட ஏரிகளை நிரப்பும் நூறேரி திட்டத்தை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. விவசாயிக்கு உயிராக இருப்பது நீர். மேச்சேரி பகுதியில் 800 அடி, 900 அடி ஆழத்துக்கு குழாய் கிணறு அமைத்தால்தான் நீர் கிடைக்கும். அப்படிப்பட்ட இந்த பகுதியில் இன்றைக்கு தண்ணீர் நிரம்பி வழியும் காட்சியை நாம் பார்க்கிறோம்.
இது அதிமுகவின் சாதனை. இன்னமும் இந்த திட்டம் முழுமை அடையவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், ஸ்டாலினின் அரசு நூறேரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. பல ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சி வந்ததும் எஞ்சிய ஏரிகளை நிரப்பி விவசாயிகளுக்கு நீர் வழங்குவோம்.
அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் உதவி செய்த அரசு அதிமுக அரசு. பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக நிதியை பெற்றுத் தந்தோம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதற்குக் காரணம், அதை நிர்வகிக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு டிஜிபி இதுவரை நியமிக்கப்படவில்லை. ஒரு பொறுப்பு டிஜிபியை முதல்வர் நியமித்தார். அவர் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அதற்கு மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபியை நியமித்த அரசுதான் விடியா திமுக அரசு.
சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கக்கூடிய டிஜிபியைக் கூட நியமிக்க முடியாத அவல ஆட்சியை நாம் பார்க்கிறோம். பிறகு எப்படி குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்? டிஜிபி நியமிக்காத ஆட்சியில் மக்களுக்கு எப்படி நன்மை கிடைக்கும்? மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். நம் சேலம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். மேட்டூர் சட்டமன்றத் தொகுதி – மேச்சேரி – ஓமலூர் நான்குவழிச் சாலையை சிறப்பாக அமைத்துள்ளோம். பவானி–மேட்டூர்–தொப்பூர் வரை நான்கு வழிச் சாலைக்கு திட்டமிட்டு செயல்படுத்தினோம். இந்த ஆட்சியாளர்கள் அதை இருட்டடிப்பு செய்து, இருக்கும் சாலையை ஒரு பக்கத்திற்கு ஒரு மீட்டர் என்ற அளவில் அகலப்படுத்தியுள்ளனர். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.
மேட்டூர் நகரத்திற்கு பாலம் கட்டிக் கொடுத்தோம். பாதாள சாக்கடை அமைத்துக் கொடுத்தோம். கொளத்தூருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை வழங்கினோம். மேச்சேரி–நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை வழங்கியது அதிமுக ஆட்சி. மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம். திமுக ஆட்சியில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு எதையாவது செய்திருக்கிறார்களா? ஒட்டுமொத்த தமிழகத்துக்கே இல்லை. அதிமுக ஆட்சியில் சேலத்தில் பல உயர்மட்டப் பாலங்களை கட்டிக் கொடுத்தோம்.
நம் கூட்டணி வெற்றிக் கூட்டணியைப் பற்றி ஸ்டாலின் விமர்சனம் செய்து கொண்டிருந்தார். இன்று அதிமுக தலைமையில் பலம் பொருந்திய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கைநழுவிப் போகும் நிலையில் உள்ளது. தினந்தோறும் பத்திரிகைகளில் அதைப்பற்றிய செய்திகள்தான் வெளிவருகின்றன.
ஸ்டாலினே… உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்வி எழுந்துவிட்டது. அதிமுகவைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த கூட்டணி. தேர்தல் நேரத்தில் நாம் சந்திப்போம். திமுகவை வீழ்த்துவோம். மீண்டும் அம்மாவின் அரசை அமைப்போம்.’’ என்று பேசினார்.