’உங்கள் கனவை சொல்லுங்க' - புதிய திட்டத்தை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என அமைச்சர் அன்பில்மகேஷ் கூறினார்.;
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல நிதி நெருக்கடி இருந்தாலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பார்த்து, நாமும் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல மாநிலங்கள் நினைக்கிறது. தற்போது ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் குறித்து முதல்-அமைச்சர் கூறினார். ஒவ்வொரு குடும்பங்கள் சார்ந்து ஒரு திட்டங்கள் இருக்கும். அவர்களின் கனவை தெரிவிக்கும் வகையில், ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என கருத்து கேட்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம்.
இதுவரை யாரும் செய்யாத நிகழ்வாக, உங்கள் கனவை கூறும் வகையில் வரலாற்று திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு படிவத்தில் 10 திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் மக்கள் முத்தாய்ப்பாக நினைக்கும் 3 திட்டங்களை கூறச்சொல்வோம். வீடு, குடும்பம், மாவட்டம் சார்ந்த கருத்துகளை தனிநபர் தெரிவிக்கும் வகையில் திட்டம் செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் 2030க்கும் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷினரி டாக்குமெண்டை உருவாக்க முடியும் என முதல்-அமைச்சர் கருதுகிறார்.
வருகிற 9-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்குகிறார். 30 நாட்கள் மக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்படும். 11-ந்தேதி முதல் இந்த திட்டம் தொடர்பான இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. இணையதளம் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை சொல்லலாம். இளைஞர்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளோம். அடுத்த மாதம் கருத்துகள் பெறப்பட்டு, மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெறும்.”
இவ்வாறு அவர் கூறினார்.