கம்பம் காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யபட்டது.;
தேனி மாவட்டம் கம்பம் காசி விசாலாட்சி அம்மன் உடனாகிய காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், கோவில் தெற்கு வாசல் அருகே 2 யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜை, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
அதன்பின்னர் தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு என 4 காலங்காக பிரிக்கப்பட்டு யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 3 மணியளவில் 6ம் கால பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் காலை 7 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவில் கோபுரங்களுக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் பொன்முடி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயபாண்டியன், கே.வி.முருகேசன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.