தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிபவனி நடந்தது.;

Update:2025-07-26 04:38 IST

கோப்புப்படம் 

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443-வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 6 மணியளவில் திருச்சிலுவை சிற்றாலயம் முன்பிருந்து தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் கொடி பவனி தொடங்கியது. இதில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் இன்று காலை ஏற்றப்படவுள்ள அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர். மேலும், நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை கைகளில் ஏந்தி சென்றனர். அதுபோல பக்தர்கள் கல்வி உபகரணங்கள், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காணிக்கை பொருள்களையும் பவனியாக கொண்டு சென்றனர்.

இந்த பவனி செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக தூய பனிமய மாதா ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு பாதிரியார்கள் கொடிகள் மற்றும் காணிக்கைகளை பெற்றுக் கொண்டு மக்களை ஆசீர்வதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இந்த திருப்பலி முடிந்ததும் கொடியேற்றம் நடக்கிறது. விழாவில் வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்