திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது.;

Update:2025-06-28 11:44 IST


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்தட்ட வளாக பணிகளும், ரூ.100 கோடியில் அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதில் திருப்பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன.

ராஜகோபுரம் கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கோவில் உள்புறம் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் விமான கலசங்களில் தங்கத்தகடு பதிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்நிலையில் நேற்று காலையில் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லப விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் யாகவேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், கண்காணிப்பாளர்கள் விஜயலட்சுமி, அஜித் மற்றும் திரிசுதந்திரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வருகிற 1-ந் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதற்கிடையில் நேற்று மாலையில் கலெக்டர் இளம்பகவத் திருச்செந்தூர் வருகை தந்தார். தொடர்ந்து அவர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அறநிலையத்துறை அதிகாரிகள், உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்