திருப்பூர் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கு: தந்தை - மகன் சரண்
தந்தை - மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்துள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பக்கத்துத் தோட்டத்தில் இருந்தவர்கள், 100 க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் அங்கு வந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த தந்தை, மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். முன்னதாக தந்தை, மகன் சண்டையை பிரித்து ஆம்புலன்சில் அனுப்பி வைக்க சண்முகவேல் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொன்றநிலையில், மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தந்தை - மகன் இருவரும் எஸ்.பி அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவு ஆகியுள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.