திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

அஜித்குமார் தரப்பு வக்கீல்களில் ஒருவரான கணேஷ்குமாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.;

Update:2025-07-03 09:57 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தொடங்கினார்.

முதலில் திருப்புவனம் கூடுதல் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, நகை தொலைந்து போனது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சி.எஸ்.ஆர். மற்றும் எப்.ஐ.ஆர். ஆவணங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, போலீஸ் நிலையம் மற்றும் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் ஆவணங்களையும் நீதிபதியிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.

தொடர்ந்து, தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வீடியோ பதிவு செய்த கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், மடப்புரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, கோவில் பணியாளர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், கோவில் பாதுகாப்பு அலுவலரும், சி.சி.டி.வி. கண்காணிப்பாளருமான சீனிவாசன் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக நீதிபதி விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர், அஜித்குமார் தரப்பு வக்கீல்களில் ஒருவரான கணேஷ்குமாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தி, பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். இந்த விசாரணையின் போது, அஜித்குமார் தாக்கப்பட்ட சம்பவம், நகை திருட்டு போனதா, அந்த புகாரின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, அனைவரையும் தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே அவர்கள் அளித்த தகவல்களை பதிவு செய்யும் வகையில், கோர்ட்டு பணியாளர்களும் அங்கு வந்தனர். இந்த விசாரணையானது, சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இரவிலும் நீண்ட நேரம் விசாரணை தொடர்ந்தது.

இந்த நிலையில், இளைஞர் மரண வழக்கு தொடர்பாக இன்று 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தி வருகிறார். அஜித்குமார் தாக்கப்பட்ட இடமான கோவிலின் கோசாலை உள்ளிட்ட இடங்களில் விசாரித்து வருகிறார். மேலும் காவலர்கள், மடப்புரம் கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்