கடலோரப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணத்தை கண்டறியும் பணி தீவிரம்

ஆமைகள் இறப்புக்கான காரணத்தை அறிவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.;

Update:2025-02-07 10:26 IST

சென்னை,

தமிழக கடலோரப் பகுதிகளில் 'ஆலிவ் ரிட்லி ஆமைகள்' என்று கூறப்படும் பங்குனி ஆமைகள் இறந்த நிலையில் கொத்து கொத்தாக கரை ஒதுங்கின. இதுவரை கிட்டத்தட்ட1,000-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. இந்த அளவுக்கு இறப்பு என்பது இதற்கு முன்பு நடந்திராத சம்பவம் என்பதால், உயிரின ஆர்வலர்களையும், ஆமை பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இதற்கிடையில் இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, அரசிடம் உரிய விளக்கங்களை அளிக்க உத்தரவு பிறப்பித்தது. அரசும் இதைத் தொடர்ந்து தலைமை வன உயிர் பாதுகாவலர் தலைமையில் பணிக்குழுவை அமைத்தது. அந்த குழுவும் பணிகளை தொடங்கியுள்ளது.

ஆமைகள் இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை அதே இடத்திலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வந்தும் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலான ஆமைகள் இறந்து வெகு நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்குவதால், இறப்புக்கான காரணம் குறித்து அறிவதில் சிக்கல்கள் நீடிப்பதாக , கூறப்படுகிறது.

இதற்கிடையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்ட இறந்த ஆமைகளை பிரேத பரிசோதனை செய்ததில், ஒரு ஆமையின் தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், மற்றொரு ஆமைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அரசு தாக்கல் செய்ய உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில், இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்வது குறித்தும், ஆமைகள் உயிரிழப்பில் உள்ள நடைமுறை சவால்கள் குறித்தும் சிறப்பு பயிற்சியை தமிழ்நாடு வனத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து கள கால்நடை டாக்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ரீப்வாட்ச் கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள் பயிற்சிகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்