கேலி, கிண்டல் செய்பவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை: மு.க.ஸ்டாலின்

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update:2025-07-02 10:53 IST

சென்னை,

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 இணைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். 32 இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அரசு துறைகளிலேயே நான் இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகம் கலந்துகொள்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 2,376 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 150 திருமணங்களுக்கு நானே தலைமையேற்று நடத்தி வைத்துளேன்.

திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ளது. பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு 3,177 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். 997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடியார்க்கு அடியார்போல் அமைச்சர் சேகர்பாபு உழைத்து வருகிறார்; அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு மட்டுமின்றி புயல் பாபுவாகவும் மாறியுள்ளார்.

பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்களால் இந்து சமயஅறநிலையத்துறையின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் நம் ஆட்சியின் ஆன்மிக தொண்டை பாராட்டுகிறார்கள். வெறுப்பையும், சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களால் எங்களைப் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமர்சித்து கேலிசித்திரம் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அவதூறுகள்தான் எனக்கு ஊக்கம், உற்சாகம் அளிக்கின்றன. இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்