மோகன் பகவத் வன்ம பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி

மோகன் பகவத்தின் அரசியல் வன்முறை பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.;

Update:2025-12-23 18:55 IST

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில், மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஷ்டீரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு விழா நிகழ்வில் பேசிய மோகன் பகவத் “இந்தியா இந்து நாடு” என அறிவித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை நிராகரிக்கும் அரசியல் வன்ம தாக்குதலாகும். சூரியன் சுழன்றபடி இருப்பதையும், பூமி உள்ளிட்ட பல கோள்கள் சூரியனை சுற்றி சுழன்று வருவதையும் அறிவியல் ஆய்வு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்த உண்மையாகும்.

உலகம் ஒப்பு கொண்டுள்ள உண்மையை மறைத்து, மறுத்து “சூரியன் கிழக்கில் உதிக்கிறது” என மூடநம்பிக்கையை ஆதரிக்கும் என கூறிய பகவத் இதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் ஒப்புதல் தேவையா? தேவையில்லை என நக்கலடித்து விட்டு, “இது போல் ஹிந்துஸ்தான் ஒரு இந்து தேசம்” என அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எப்போதாவது “இந்தியா ஒரு இந்து தேசம்” என்ற வாக்கியத்தை சேர்க்க முடிவு செய்யலாம். அது அரசின் விருப்பம். அவ்வாறு செய்தாலும், செய்யாவிட்டாலும், எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை” என ஆணவத்தின் உச்ச நிலையில் கொக்கரித்துள்ளார். மதச்சார்பின்மை என்பது தான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பாக அமைந்துள்ளது என உச்ச நீதிமன்றம் பலமுறை, பல வழக்குகளில் விளக்கம் அளித்த பின்னரும், “மதச்சார்பற்ற” என்ற வார்த்தை இடைச்செருகலாக சேர்க்கப்பட்டது என சித்தரித்து அரசியலமைப்பு சட்டத்தையும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் சிறுமைப்படுத்தியுள்ளார்.

வைதீக மரபில் உடைமைகளையும், சமூகம் உற்பத்தி செய்யும் செல்வத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன், உழைக்கும் மக்களை பிளவு படுத்திய சாதிய கட்டமைப்பு பிறப்பை அடிப்படையாக கொண்டது என்று நியாயப்படுத்துகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். நாட்டின் பன்மை கலாசாரத்துக்கும், பழக்க வழக்கங்களுக்கும் எதிராக, அரசியலமைப்பு சட்டத்தை கேலிப்பொருளாக்கி பேசும் மோகன் பகவத் வன்ம பேச்சை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்து, நிலைநிறுத்த வேண்டிய உச்ச நீதிமன்றம், மோகன் பகவத்தின் அரசியல் வன்முறை பேச்சை, வாய்மூடி கடந்து செல்ல கூடாது, அவரது பேச்சு தொடர்பாக தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டு கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்