தொகுதி பங்கீடு; பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பண்டிகை முடிந்ததும் தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.;

Update:2025-12-23 16:58 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், கட்சிகள் அதற்கு தயாராகும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சென்னை லீலா பேலசில் பியூஷ் கோயலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. சார்பில், தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

இதுபற்றி எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது? என்பது குறித்து ஆலோசித்தோம் என்றார்.

இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக பியூஷ் கோயலிடம் எடப்பாடி பழனிசாமி பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில், அ.தி.மு.க. 170, பா.ஜ.க. 23, பா.ம.க. 23, மற்றவை 18 (தே.மு.தி.க.-6, அ.ம.மு.க.-6, த.மா.கா.-3, ஓ.பி.எஸ்.-3) தொகுதிகளில் போட்டியிடும் என்பதற்கான விவரங்கள் உள்ளன என கூறப்படுகிறது.

கூட்டணி தொடர்ப்க பா.ம.க., தே.மு.தி.க.விடம் நாங்களே பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறோம் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தினகரன் ஆகியோருடன் பா.ஜ.க.வே பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளட்டும் என கூறியுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்ததும் தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்