ஒன்றரை மணி நேரம் நடந்த அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை நிறைவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் விஜய் குறித்து, பியூஷ் கோயல் விவாதித்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-12-23 15:33 IST

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் அளித்தல், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி உடன் பேசியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் 30 - 40 தொகுதிகள் வரை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் விஜய் குறித்து பியூஸ் கோயல் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக வாக்குகளால் தே.ஜ.கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று கோயல் அறிவுறுத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனை கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பின்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் பாஜக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி பதில் தர மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்