26-ந்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் 101 வது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.;

Update:2025-12-23 15:23 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி கான்பூரில் (உத்தரபிரதேசம்) நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு ,சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமை ஏற்க அழைக்கப்பட்டிருந்தார்கள். அவரது தலைமை உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது முதல் நாட்டின் பரிபூரண விடுதலைக்காக போராடியது. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிகளற்ற, வர்க்கங்களற்ற, சுரண்ட சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் போராடி வருகிறது .

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்காகவும்,பல்வேறு மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்க, வங்கிகளை நாட்டுடைமையாக்கிட, மன்னர் மானியத்தை ஒழித்திட ,நிலப்பிரபுத்துவ - சாதிய கொடுமைளை ஒழித்திட வீரம் நிறைந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்கள் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காகவும், இறையாண்மையை பாதுகாப்பதற்காகவும், உறுதியோடு போராடிவருகிறது.

இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்காக போராடிவருகிறது. அளப்பரிய தியாகங்களை செய்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமையகமான சென்னை தியாகராயா நகரில் உள்ள பாலன் இல்லத்திலும் இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அது மட்டுமன்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் 101 வது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கிய பங்கு வகித்த அமீர் ஹைதர் கானின் 36 வது நினைவு நாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே.தங்கமணி அவர்களின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இந்நிகழ்வுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்குகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி தியாகிகள் சுடரை ஏற்றி வைக்கிறார். மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. முத்தரசன் கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். உறுப்பினர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்நிகழ்வுகளையொட்டி, மக்கள் தொண்டர் படை, தலைமைத் தளபதி தோழர் எம்.இலகுமைய்யா தலைமையில் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் சீருடை அணிந்து கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வுகளை தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். கே.சிவா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த. வெங்கடேஷ் வேம்புலி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ஏ.ராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இந்நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்