பெண்ணை அடித்துக்கொன்று வாய்க்காலில் வீசியது ஏன்..? கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெண் மாயமானதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.;
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே வி.மணவெளி செந்தாமரை நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 40). இவருக்கும், பரத்ராஜ் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்தநிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தமிழ்செல்வி தனியாக வசித்து வந்தார். ஒதியம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மகள் படிக்கிறார். அவரை தினமும் காலையில் தமிழ்செல்வி அழைத்துச்சென்று விட்டு, மீண்டும் மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். கடந்த 5-ந்தேதி பள்ளிக்கு சென்ற மகளை அழைக்க தமிழ்செல்வி போகவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது தம்பி மதன்ராஜிக்கு போன் செய்து, மருமகளை அழைத்துச்செல்லுமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
அதன்பேரில் மதன்ராஜ் பள்ளிக்கு சென்று மாணவியை அழைத்துக்கொண்டு செந்தாமரை நகரில் உள்ள வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு தமிழ்செல்வியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது அக்காவை கண்டுபிடித்து தருமாறு வில்லியனூர் போலீசில் மதன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்செல்வியை தேடி வந்தனர்.
அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்தனர். இதில் ஒதியம்பட்டு ரங்கசாமி நகரை சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரர் அய்யப்பன் (40) தமிழ்செல்வியிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்ததில், தமிழ்செல்வியை கொலை செய்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
தொடாந்து விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வியை கொலை செய்த காரணத்தை அய்யப்பன் கூறினார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்ச்செல்வியை கொம்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து அய்யப்பன் பார்த்துள்ளார். அப்போது இருவரும் பேசி, நட்பாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தமிழ்செல்விக்கு விவாகரத்து ஆனதை தெரிந்துகொண்ட அய்யப்பன், அவருடன் நெருங்கிப் பழகினார். குடும்ப செலவுக்காக அவ்வப்போது அவரிடம் பணம் வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.1.5 லட்சத்தை அய்யப்பனிடம் தமிழ்செல்வி வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று மகளை பள்ளியில் விட்டு விட்டு அய்யப்பனை பார்ப்பதற்காக ஒதியம்பட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு தமிழ்செல்வி சென்றார். அப்போது பணத்தகராறு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தமிழ்செல்வியை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இது வெளியில் தெரிந்தால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்த அய்யப்பன், உடலை சாக்கு மூட்டையில் திணித்து, மறைத்து வைத்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சாக்கு மூட்டையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோர்க்காடு பகுதியில் உள்ள விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையோரம் குடுவையாற்றின் வாய்க்காலில் வீசினார். பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் அய்யப்பன் சகஜமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அய்யப்பனை போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழ்செல்வி உடல் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட அவரை அழைத்துச்சென்றனர். கோர்க்காடு பகுதியில் வாய்க்காலில் தண்ணீரில் கிடந்த சாக்குமூட்டையை அய்யப்பன் அடையாளம் காட்டினார். அதனை போலீசார் வெளியே எடுத்தபோது, துர்நாற்றம் வீசியது. பின்னர் மூட்டையை பிரித்து பார்த்தபோது, அழுகிய நிலையில் தமிழ்செல்வி உடல் இருந்தது. பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கோர்க்காடு பகுதியில் திரண்ட தமிழ்செல்வியின் உறவினர்கள், அய்யப்பனை சூழ்ந்து தாக்கினர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, அய்யப்பனை மீட்டு வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில் தமிழ்செல்வி மாயமானதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். அய்யப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அய்யப்பனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் அய்யப்பனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரையும் கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியுள்ளார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீனில் வந்து தற்போது தமிழ்செல்வியுடன் பழகி அவரையும் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.