கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.;
சென்னை,
பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காமராஜர் சாலையில் ஆங்காங்கே 30 பேர் கொண்ட குழுவாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.