சிறந்த தேசியவாதி, பண்பாளர் - நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பால் இந்திய திரையுலகின் உச்சத்தில் இருப்பவர் என நடிகர் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்தனர். அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இன்று 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்திய திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டி கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.