திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.;
மதுரை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வக்கீல்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். மேலும் உண்மையிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. எந்த பிரச்சினையும் இல்லை. 1994-ல் இருந்துதான் பிரச்சினை ஏற்பட்டது, தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2014-ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வக்கீல், “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில், நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது; மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது” என்று தெரிவித்தார்.
பின்னர் அரசு தரப்பில் "பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி. தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும். தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கல் அமைப்பு, ஒரு தீபத்தூணா? என்பது அடிப்படைக் கேள்வி. குறைந்தபட்சம், ஏதோ ஒரு கால கட்டத்தில், அங்கு தீபம் ஏற்றியதற்கான, ஏற்கத்தக்க ஆதாரங்கள் சமர்ப்பித்திருந்தால் அதைத் தீபத்தூண் என்று ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தனி நீதிபதி முன்பு ஒரு துண்டுச் சீட்டு கூட, ஆதாரமாக சமர்ப்பிக்கப்படவில்லை.
ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நிர்வாகம் செயல்பட முடியாது. தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றக் கூறுவது தேவையில்லாத பிரசினையை உருவாக்கும். தேவையில்லாமல் மாற்றிடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.