குடும்பத் தகராறில் பெண் அடித்துக்கொலை - கணவர் கைது

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.;

Update:2025-10-01 21:53 IST

கோப்புப்படம் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (28 வயது). ஒரகடம் பகுதியில் லேத் பட்டறை வைத்து வேலை செய்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (23 வயது) என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை மற்றும் 3 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 25-ந்தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறின் போது கை மற்றும் இரும்பு கம்பியால் நந்தகுமார், ஷாலினியை தாக்கியுள்ளார். கணவர் தாக்கியது ஷாலினியின் தந்தை மணிகண்டனுக்கு தெரிந்ததும் அவர் ஷாலினியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஷாலினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒரகடம் போலீஸ் நிலையத்தில் ஷாலினியின் தந்தை மணிகண்டன் புகார் அளித்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக ஒரகடம் போலீசார் பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்