டிட்வா புயல்: சென்னைக்கு மழை குறைவு ஏன்? வெதர்மேன் விளக்கம்
வறண்ட காற்றாலும், ஈரக்காற்றின் முறிவு காரணமாகவும் டிட்வா புயலானது காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது என கூறப்பட்டுள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலவக்கூடும்.டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்க வாய்ப்பு இல்லை. தற்போது சென்னைக்கு 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 130 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 120 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் நேற்று மாலை முதல் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் அதி கனமழையே இல்லாமல் போனதற்கு காரணம் என்ன என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வறண்ட காற்றாலும், ஈரக்காற்றின் முறிவு காரணமாகவும் டிட்வா புயலானது காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது. இது மயிலாடுதுறைக்கு 140- 220 மி.மீ. மழையை கொடுத்துள்ளது. அது போல் டெல்டா மாவட்டத்தில் தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் எந்த மேகக் கூட்டங்களையும் உருவாக்காமல் வெறும் கூடாகவே காற்றழுத்தம் நிலவும். இன்றைய தினம் பிற்பகுதியில் வடதமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அருகே மேகக் கூட்டங்கள் உருவாகும். சென்னைக்கு அருகே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.