தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர்,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது. இந்த சூழல், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்தது. அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், வட தமிழகம், புதுச்சேரி வழியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை இதே சமயத்தில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பதை வானிலை மையம் கண்காணித்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.