ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்க கூடும்: இந்திய வானிலை மையம் தகவல்
புயலின்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும்.
சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதன்பின்னர், புயல் 27-ந்தேதி காலை வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியில் சூறாவளி புயலாக மாறி, 28-ந்தேதி காலை வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு வடமேற்கே நகர கூடும். அதன்பின்னர் கடுமையான சூறாவளி புயலாக மாறும்.
தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே அன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.