மரண தண்டனையை எதிர்த்து ஷேக் ஹசீனா கட்சி போராட்ட அறிவிப்பு
ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என்று அவாமி லீக் கட்சி தெரிவித்துள்ளது.;
டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள தேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது என்றும் அதை எதிர்த்து வருகிற 30-ந்தேதி வரை நாடு தழுவிய போராட்டங்கள் பேரணிகள் நடத்தப்போவதாகவும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சட்டவிரோத தீர்ப்பை நிராகரித்து இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் பதவி விலகக் கோரி 30-ந்தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படும் என்று அக்கட்சி தெரிவித்து உள்ளது.