இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.;

Update:2025-10-07 18:24 IST

இஸ்லாமபாத்,

கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலின்போது, சீனத் தயாரிப்பு ஆயுதங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டன என்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் கூறியுள்ளது.ஆனால், இந்தியா பயன்படுத்திய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இந்த போரில் அபார வெற்றி கண்டதாகவும், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்ததாகவும் இந்திய விமானப்படைத் தளபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் (ISPR) டைரக்டர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

நாங்கள் அனைத்து வகையான தொழில்நுட்பங்களுக்கும் தயாராக இருக்கிறோம். சீனத் தளவாடங்கள், மே மாதம் நடந்த போரில், மிகவும் சிறப்பாக செயல்படுவதை நிரூபித்துள்ளன என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் 7 போர் விமானங்களைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட இந்தியாவின் தாக்குதலில் வீழ்த்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் ஒருபோதும் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளுடன் விளையாட முயற்சித்ததில்லை என்று கூறினார்.மே மாத மோதலின் போது பாகிஸ்தானின் விமானப்படை சீன ஜே-10சி ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் முகமது இஷாக் டார் கூறியிருந்தார். ஜெனரல் சவுத்ரியின் இந்தக் கூற்றுகள், கள நிலவரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளன.

பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் பிஎல்-15 ஏவுகணை போன்ற அதிநவீன ஆயுதங்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சீனாவின் எச்கியூ-9பி ஏவுகணைகள் மற்றும் ஜே.எப்-17, ஜே-10 போர் விமானங்களும் இந்தியாவின் தாக்குதலில் தகர்க்கப்பட்டன.

இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா பாகிஸ்தானின் 8 முதல் 10 போர் விமானங்களை அழித்ததாக தெளிவுபடுத்தியுள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

நான்கு நாட்கள் தீவிர எல்லை தாண்டிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு உடன்பாட்டை எட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்