எப்ஸ்டீன் ஆவணங்கள்: நீக்கப்பட்ட டிரம்ப் புகைப்படங்கள் மீண்டும் சேர்ப்பு

மாற்றம் ஏதுமின்றி புகைப்படங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-22 21:57 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவர் மீதான விசாரணை ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பிரபலங்கள் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும்(Epstein Files) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்படி, ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் தொகுப்பு ஆவணங்கள் அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் டக்கர், இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்கள் அதில் அடங்கும். இவர்களில் பலர் ஏற்கனவே மறைந்துவிட்ட நிலையில், மற்ற பிரபலங்கள் தங்களுக்கும் எப்ஸ்டீன் வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளனர்.

இதனிடையே, ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் அமெரிக்க நீதித்துறை (DOJ) இணையதளத்தில் இருந்து எவ்வித விளக்கமுமின்றி நீக்கப்பட்டன.

இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளில் நிர்வாண ஓவியங்கள் மற்றும் டிரம்ப், மெலனியா, எப்ஸ்டீன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களும் அடங்கும். இது உண்மைகளை மறைக்கும் செயல் என நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் டிரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது. பதிப்பாய்வுக்காக புகைப்படங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாகவும், தற்போது மாற்றம் ஏதுமின்றி புகைப்படங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்