சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு
மலேசியாவின் பிரதமராக நஜீப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை செயல்பட்டார்;
கோலாலம்பூர்,
மலேசியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவர் பதவியில் இருந்தபோது மலேசிய மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 கோடி (இந்திய மதிப்பில்) ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
3 ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையில் நஜீப் ரசாக் குற்றவாளி என 2022ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மேல்முறையீட்டிற்குப்பின் சிறை தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
அதேவேளை, நஜீப் ரசாக் வீட்டுக்காவலில் இருக்க முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல் அகமது ஷா ஆணை பிறப்பித்தார். நஜீப் ரசாக் தனது எஞ்சிய தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மன்னரின் ஆணையை நிறைவேற்றும் வகையில் சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நஜீப் ரசாக்கை வீட்டுக்காலில் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும், முன்னாள் மன்னர் அகமதுவின் ஆணை அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.