ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-10-13 15:24 IST

 காசா,

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2023 அக்டோபர் மாதம் முதல்  போர் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று கூறி, இஸ்ரேல் தனது முழு பலத்தையும் கொண்டு காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. “அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்; கைதிகளை விடுவிக்க வேண்டும்” என டிரம்ப் கெடு விதித்திருந்தார். இதையடுத்து மூன்று நாட்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல்–ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, தங்கள் வசம் இருந்த பணயக்கைதிகள் (20 பேர்) அனைவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பணயக்கைதிகளாக இருந்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்ததால், அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்