ஐ.நா.சபையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது; இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று இந்தியா கூறியுள்ளது.;

Update:2025-09-20 21:21 IST

ஜெனீவா,

காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இவ்விவகாரத்தை அடிக்கடி ஐ.நா.சபையில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.

இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது:-

மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியாகவும் வேண்டுமென்றே முயற்சிப்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த கவுன்சிலின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் உள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் முக்கிய கொள்கைகளை வேண்டுமென்றே மீறுகிறது.

பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நீடித்த ஒத்துழைப்பு என்பதுபயங்கரவாதத்தில் இல்லை. அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எனவே இந்த கவுன்சில் தன்னை திசைதிருப்பல் மற்றும் திரிபுபடுத்தலுக்கான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை பாகிஸ்தான் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறது.’இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்