டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்
அமைதி வாரியத்தில் இணைய இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.;
ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த அமைதி வாரியத்தில் துருக்கி இடம்பெற்றிருப்பது குறித்து இஸ்ரேல் அரசு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நெதன்யாகு அமைதி வாரியத்தில் இணைய சம்மதித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இதுவரை இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, வியட்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, அர்ஜென்டினா மற்றும் பெலாரஸ் ஆகிய 8 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அமைதி வாரியத்தைப் பொறுத்தவரை இதில் பெரும்பகுதி அதிகாரம் அமெரிக்க அதிபரான டிரம்ப்பிடமே இருக்கும் என்றும், இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இணைய ஒரு பில்லியன் டாலர் நிதியை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நாளை நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், அமைதி வாரியம் குறித்த கூடுதல் விவரங்களை டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.