பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்
பாகிஸ்தானில் இரும்பு தடிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சியால்கோட் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியானார்கள்.;
பஞ்சாப்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டது. அடர்ந்த பனியால் தெளிவற்ற பார்வைநிலையால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் வேன் ஓட்டுநர் அஸ்கார் (வயது 35), துராப் அலி (வயது 15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
8 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நான்கானா சாகிப் பகுதியிலுள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் குலாம் பரீத் (வயது 14), அமிர் (வயது 18) மற்றும் அடீல் (வயது 19) ஆகியோர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
இதேபோன்று அடர்ந்த பனியால் மற்றும் அதனால் ஏற்பட்ட பனிமூட்டம் ஆகியவற்றால் இரும்பு தடிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சியால்கோட் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் பலியானார்கள்.