4-வது குழந்தைக்கு பெற்றோராகும் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்-உஷா தம்பதி
அமெரிக்கர்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என வான்ஸ் பேசினார்.;
நியூயார்க்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி உஷா வான்ஸ். இந்த தம்பதிக்கு, இவான் (வயது 8), விவேக் (வயது 5) மற்றும் மிராபெல் (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வான்ஸ்-உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறக்க உள்ளது. இதனை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அதில், உஷாவுக்கு 4-வது ஒரு குழந்தை பிறக்க உள்ளது. அவன் பையனாக இருப்பான். ஜூலை மாத இறுதியில் அவனை வரவேற்க காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து வாழ்த்து மழை பொழியப்பட்டு வருகிறது. உஷாவின் பெற்றோர் இந்திய வம்சாவளியான கிரிஷ் சிலுகுரி மற்றும் லட்சுமி சிலுகுரி ஆவர். இவர்கள் 1970-ம் ஆண்டின் பிற்பாதியில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
அமெரிக்காவில் இருவரும் கல்லூரியில் பேராசிரியர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கவாசிகள் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அரசியலில் நுழையும்போதே வான்ஸ் கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அமெரிக்கர்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என பேசினார். அவர் தொடர்ந்து இதுபோன்று கூறி வருகிறார். அமெரிக்காவில் பிறப்பு விகிதங்கள் சரிந்து வருகின்றன என எச்சரிக்கை விடுத்த அவர், துணை ஜனாதிபதி ஆன பின்னரும் இதனை தொடர்ந்து வலியுறுத்தினார். இந்நிலையில், அதற்கு எடுத்துக்காட்டாக அவருடைய குடும்பத்தில் மற்றொரு குழந்தையை வரவேற்க தயாராக உள்ளார்.