கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண் கைது
கோஸ்டாரிகா நாட்டின் அரசியலமைப்பின்படி 2-வது முறையாக ரோட்ரிகோ தேர்தலில் போட்டியிட முடியாது.;
சான் ஜோஸ்,
கோஸ்டாரிகா நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ சாவெஸ் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அவரை பணம் கொடுத்து கொல்ல முயற்சித்து உள்ளனர்.
இதுபற்றி அந்த நாட்டின் உளவு மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவர் ஜார்ஜ் டாரெஸ் கூறும்போது, ரோட்ரிகோவை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றி நம்பத்தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.
இதேபோன்று அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் கார்லோ டயஸ் நிருபர்களிடம் கூறும்போது, சந்தேகத்திற்குரிய வகையிலான பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் சமூக ஊடகத்தில் அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வந்திருக்கிறார் என கூறினார்.
ஆனால், பிற விவரங்களை டயஸ் வெளியிடவில்லை. கோஸ்டாரிகாவில் பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதி நயீப் புகெல்லின் தலையீடு இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என எதிர்க்கட்சிகள் எச்சரித்து உள்ளன.
ஏனெனில், சமீபத்தில் ரோட்ரிகோ அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு, புதிய பெரிய அளவிலான சிறைச்சாலை ஒன்றிற்கு அடிக்கல் நாட்ட நயீப் சென்றார்.
எனினும், கோஸ்டாரிகா நாட்டின் அரசியலமைப்பின்படி 2-வது முறையாக ரோட்ரிகோ தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், தன்னுடைய முன்னாள் மந்திரிகளில் ஒருவரான லாரா பெர்னாண்டஸ் வெற்றி பெறுவதற்கான ஆதரவை வழங்கியுள்ளார்.