ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

அமெரிக்க குடிமக்கள், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.;

Update:2026-01-13 06:26 IST

வாஷிங்டன் டி.சி.,

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2,500-க்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானில் ஏற்பட்டு உள்ள போராட்டம் வன்முறையாக உருவாக கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால், கைது நடவடிக்கைகளும், காயங்களும் ஏற்பட கூடும். ஈரான் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளது. சாலைகள் முடக்கம், பொது போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் இணையதளம் முடக்கம் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

ஈரான் அரசு, மொபைல் போன், தொலைபேசி மற்றும் தேசிய அளவில் இணையதள நெட்வொர்க் சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.

இதேபோன்று, ஜனவரி 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்கள் தொடர்ந்து வரம்புக்குள் வைக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவைகள் தொடர்ந்து சஸ்பெண்டு செய்யப்பட்டும் வருகின்றன.

அதனால், அமெரிக்க குடிமக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்