ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.;

Update:2025-08-30 09:52 IST

டோக்கியோ,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை டோக்கியோவில், ஜப்பானின் 16 மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்துரையாடினேன். இந்தியா-ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மத்திய அரசு-மாகாண அரசு ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் நேற்று நடைபெற்ற 15-வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின்போது இது குறித்த தனி இயக்கம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் வர்த்தகம், புதுமை, தொழில்முனைவு மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த மகத்தான வாய்ப்புகள் உருவாகும். புதிய நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் துறைகளும் பயன்பெறும்” என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்