அமெரிக்கா: வீடு புகுந்து பெண் பாலியல் பலாத்காரம்; தப்பி சென்ற வாலிபரின் வீடியோ வைரல்
அவரிடம் அந்த பெண் கெஞ்சி, இதனை நிறுத்தும்படி கூறியதுடன், பணம் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.;
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நார்வுட் பகுதியில் புத்னம் என்ற இடத்திற்கு அருகே கிழக்கு கன் ஹில் சாலையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் 36 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கென்னத் ஸ்ரீபோ (வயது 21) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி நியூயார்க் நகர போலீசாரிடம் குற்ற புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், குடியிருப்பு கட்டிடத்துக்குள் அத்துமீறி புகுந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை அணுகி, அவருடைய வாயை ஒரு கையால் பொத்தி விட்டு, சத்தம் வராமல் இருக்க மற்றொரு கையால், குரல்வளையை பிடித்து இருக்கிறார். இதனால், அந்த பெண் பயந்து போயிருக்கிறார். தளர்வடைந்த அவரை கீழே தள்ளிய ஸ்ரீபோ, தொடர்ந்து குத்தியுள்ளார்.
இதன்பின்னர், அவரை பலாத்காரம் செய்திருக்கிறார். அவரிடம் அந்த பெண் கெஞ்சியிருக்கிறார். இதனை நிறுத்தும்படி கூறியதுடன், பணம் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த வாலிபர் அதன்பின்பு பெண்ணிடம் இருந்து பர்ஸ், பணம், அவருடைய அடையாள அட்டை மற்றும் சாவிகள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி விட்டார்.
அவர் வீட்டில் இருந்து தப்பியபோது பதிவான வீடியோ வைரல் ஆனது. இதனை நியூயார்க் நகர காவல் துறை வெளியிட்டது. கட்டிடத்தின் படியில் இறங்கி ஸ்ரீபோ ஓடுகிறார். அந்த வீடியோவில், அவர் பேண்ட்டை மேலே இழுத்து விடுவதும், கழுத்தில் துண்டு தொங்கும் காட்சிகளும் காணப்படுகின்றன.
இதனை வெளியிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். வீடு எதுவும் இல்லாமல் சுற்றி திரிந்து வந்த வாலிபர் வீட்டுக்குள் எப்படி திடீரென புகுந்து அத்துமீறலில் ஈடுபட்டார் என்று விசாரணை நடந்து வருகிறது.